2022 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட மட்ட விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (29.12.2022) காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.பாலன் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 2022ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவில் பதக்கப் பட்டியலின் அடிப்படையில் முதலாம் இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் இரண்டாம் இடத்தினை நல்லூா் பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டது.

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (29.12.2022) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (28.12.2022) காலை 10.00 மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் இலங்கையின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வை ஒட்டிய நிகழ்வுகளை இம் முறை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட இந்திய கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 11ம் திகதி நடாத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (28.12.2022) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் போதைத் தடுப்பு கல்வி உத்தியோகத்தரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எம்.ஜி.பி.எம். றொசாட் அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான பெற்றோர் திறன் விருத்தி தொடர்பான கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

உத்தியோகத்தர்களுக்கான CBR வலுவூட்டல்திறன் விருத்தி பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன் அவர்களின் தலைமையில் 27.12.2022 காலை 9.00 மணிக்கு மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
fairmed நிறுவனத்தின் நிதி அனுசரணையில் உத்தியோகத்தர்களை சமூக மட்டத்திலான புனர்வாழ்வு நிகழ்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் இப்பயிற்சி இடம்பெற்றது. அத்துடன் இப்பயிற்சி நெறியானது மூன்று நாள் பயிற்சி நெறியாக 27.12.2022 ஆம் திகதி தொடக்கம் 29.12.2022 திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது "அரச உத்தியோகத்தர்களிடம் அறிவு மற்றும் அனுபவங்கள் காணப்படுகிறது. இச் செயலமர்வு மூலம் அரச உத்தியோகத்தர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளமுடிவதோடு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கமுடியும் ஏனெனில் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.