யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (06.12.2022 ) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசாங்க அதிபர் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணை குறிக்கப்பட்ட கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக விநியோகக்கபட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு விவசாயிகள் நீர்ப்பம்பி ஊடான நீர் இறைப்புக்கும் , தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் மண்ணெண்ணை போதாமை உள்ளதாக கோரிக்கை முன்வைத்தனர் அது தொடர்பாக கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினாா்.
உணவு பாதுகாப்பு, நெற் செய்கையில் பொட்டாசியம் குறைபாடு அது தொடர்பான விவசாயிகளுக்கான பயிற்சிகள், பாடசாலைகளில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நெற் செய்கைக்கைக்கான திரவ உர விநியோகம், சேதனப்பசளை விநியோகம், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம், உருளைக்கிழங்கு செய்கை பாதிப்பு ,விதை உற்பத்தி மற்றும் அடிப்படை விதைகளை வழங்குதல், விவசாயிகளுக்கான காப்புறுதி நடவடிக்கைகள், முட்டை உற்பத்தி, விலங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தள உத்தியோகத்தர்களுக்கான அஸ்வசுமா மொபைல் அப் (Aswasuma mobile app ) தொடர்பான பயிற்சி நெறி யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 05.12.2022 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு இத்திட்டத்தினை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தும் வகையிலும் நலன்புரி நன்மைகள் சபையின் செயற்திட்டத்தின் கீழ் தரவுகளை இலகுவாக தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நோக்கிலும் அஸ்வசுமா மொபைல் ஆப் தொடர்பான ஒருநாள் பயிற்சி நெறி இடம் பெற்றது.
தேசிய இளைஞர் படையணி கியூ மெடிக்கா நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடனான கலந்துரையாடல் இன்று (01.12.2022) யாழ் மாவட்ட செயலகத்தில நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இளைஞர்களுக்காக மேற்கொள்ள உள்ள தலைமைத்துவம், மென்திறன்விருத்தி பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என் கமலராஜன், கியூமெடிக்கா நிறுவன பிரதிநிதி ரி.ஜி. பிருத்திவிராஜ், தேசிய இளைஞர் படையணியின் மேலதிக பணிப்பாளர் சமன்குலசூர்ய, தேசிய இளைஞர் படையணியின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
FAIR MED நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட மட்ட அமைப்பினை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (01.12.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அங்கவீனமுற்ற நபர்களுக்கான அமைப்பினை மாவட்ட மட்டத்தில் நிறுவும் வகையில் பிரதேச செயலக மட்டத்தில் இயங்கி வருகின்ற மாற்றுவலுவுள்ளோா் அமைப்பின் அங்கத்தவர்களை உள்ளடக்கி யாப்பின் விளக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் அமைப்பின் பெயரைத்தெரிவு செய்தல், உள்வாங்கப்படும் அங்கத்தவர்கள், பணிகள்,நோக்கம் ,எதிர்பார்ப்புக்கள், செயன்முறைகள்,அமைப்பின் நிர்வாகத் அங்கத்தவர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (30) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சானிகா மலல்கொட மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர், மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்





