தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடாத்தப்படும் மாவட்ட தொழில் முயற்சி மன்றம் அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் தலைமையில் இன்று (29.11.2022) மு.ப 9.00 மணிக்கு மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செ.நிக்கொலஸ்பிள்ளை, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு இ.சுரேந்திரநாதன், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண இணைப்பாளர் திரு க.ரவிக்குமார், மாவட்ட செயலக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட செயலக மற்றும் பிரதேசசெயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், கைத்தொழில் சார் நிறுவனங்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Solidarity Center நிறுவனத்தின் அனுசரனையில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 29.11.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அலுவலக வேலைச்சூழலில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அலுவலர்களுக்கு காணப்படும் பிரச்சினைகள், தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் அலுவலர்களால் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான சாதகமான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறினாா்.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (25.11.2022) பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகள், போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைள் மற்றும் முற்பாதுகாப்பு நடவடிக்கைள், மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைளை அனைத்து திணைக்களங்களின் ஊடாகவும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளுதல், பொலிஸாரின் பொறுப்புக்கள், சட்ட ரீதியான தண்டனைகள் மற்றும் நடவடிக்கைள், புனர்வாழ்வு மையத்தை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மீளாய்வு கூட்டமானது (25.11.2022) காலை9.00 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி பணிப்பாளர் தி.விஸ்வரூபன் தலைமையில் இடம்பெற்றது.
சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தொடர்பான விடயங்கள், சமுதாய அடிப்படை அமைப்பு பதிவினைப் புதுப்பித்தல், பிரதேச அமைப்புக்களிற்கு சொந்தமான நிதியங்கள், அருணலு கடனை வழங்குவதன் முன்னேற்றங்கள், சமுர்த்திப் பசுமை நிறை தாயக மரநடுகை வேலைத்திட்டங்களும் அவற்றின் செயற்பாடுகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமைப்பட்டியல் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் சமுதாய அமைப்புக்களின் 2023ஆம் ஆண்டின் செயற்பாட்டுத்திட்டமிடலை 2022.12.15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச அமைப்பிற்கு அல்லது சமுதாய அடிப்படைவங்கிச்சங்கத்திற்கு வழங்கவேண்டும், பிரதேச அமைப்புக்களின் 2023 ஆம் ஆண்டின் செயற்பாட்டுத்திட்டமிடலை 2022.12.20 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்திக் கணக்காளர் திரு. இ.முருகதாஸ், சிரேஸ்ட முகாமையாளர் திரு. ஆ. ரகுநாதன், பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், வங்கிச்சங்க முகாமையாளர்கள், சமுதாய மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
சமுர்த்தி தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கருத்திட்ட முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. T.விஸ்வரூபன் தலைமையில் (24.11.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் "தொழில் முயற்சியாளர்களுக்கு சரியான தொழில்நுட்பமின்மை ,சந்தர்ப்பங்கள் கிடைக்காமை, வழிகாட்டலின்மை போன்ற காரணங்களால் தோல்வி அடைய நேரிடுவதாகவும், அவர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்குதல், வளங்களை உச்சமாக பயன்படுத்துதல், தொழில் பயிற்சிகளை வழங்குதல், தேவைகளை அறிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்குதல் போன்றவற்றை பிரதேச மட்டங்களில் கருத்திட்ட முகாமையாளர்கள் ஏற்படுத்துவதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியும்" எனக் கூறினார்.





