UNDP நிறுவனத்துடன் இணைந்து சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறையினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குவதற்கென 40 அவசரப் பொதிகள் மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவிற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் (26.10.2022) மாலை 3.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், UNDP நிறுவன பிரதிநிதிகள், சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாகன உடைமை மாற்றத்திற்கான ஒருநாள் சேவையானது (22.10.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களால் யாழ்ப்பாண மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2022.10.22 ஆந் திகதி முதல் பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், சாதரண சேவையில் உடைமை மாற்றத்திற்கான சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமான ஆவணங்களையும் இணைத்து உடைமை மாற்றப்படிவங்களை நேரில் வந்து சமர்ப்பிப்பதன் மூலம் ஒருநாள் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

உலக உளநல நாள் மற்றும் தேசிய உளவளத்துணை நிகழ்ச்சி யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (19.10.2022) மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க. சிவசுதன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட உளவியல் விரிவிவுரையாளர் திரு க.கஜவிந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் மனிதன் உளநலம் பாதிப்பிற்கு உள்ளாகுவதாக இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவை தலைவருமான திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (21.10.2022) சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக சாகித்திய ரத்னா திரு. ஐ. சாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர்களின் மங்கள வாத்தியங்களுடன் யாழ். நாச்சிமார் ஆலயத்திலிருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.இதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றலுடன், தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வணக்கம் இசைக்கப்பட்டது.மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையால் "யாழ்ப்பாணம்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மூத்த கலைஞர்களுக்கு "யாழ் முத்து"விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.அத்தோடு, யாழ்ப்பாண மாவட்ட இளங்கலைஞர்களும் விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டார்கள்.

கள் விற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (19.10.2022) காலை 11.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கள் விற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்தலில் மதுவரித்திணைக்களத்தின் நடைமுறைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல், வரிக்கட்டுப்பாடு, சங்கங்களின் கோரிக்கைகள், மூடிக்காணப்படும் கள் விற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஜீவனோபாயம் பாதிக்கப்படல், கள் விற்பனை நிலையங்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள், கள் விற்பனை நிலையங்களை நவீனப்படுத்தல், என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.