பின்தங்கிய நிலையில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார மேம்பாட்டினை அடைதல் தொடர்பான திட்ட அறிமுக ஆலோசனை அமர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (19.10.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.நிதி அமைச்சினுடைய தேசிய ஒருமைப்பாட்டின் கீழும் USAID நிறுவன அனுசரனையுடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது தனியார் துறை முயற்சியாளர்களின் கூடுதல் பங்களிப்பில் இதனுடைய வெற்றி அடங்கியுள்ளதாக தெரிவித்தார்.தற்பொழுது உற்பத்தியாளர்களைவிட விற்பனை முகவர்கள் அதிக உறுதியுடன் செயற்படுகின்றனர்.சுய தொழில் முயற்சியாளர்களின் வலையமைப்பு பரந்துபட்டு பலமாக உருவாக்கப்படவேண்டுமென்றால் உள்ளக தொடர்பாடலும், உள்ளக செயற்பாடுகளும் மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் நடாத்தப்படும் விற்பனைக் கண்காட்சி (19.10.2022) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் இந்த விற்பனைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மாவட்ட சிரேஸ்ட பேரவையும் இணைந்து நடாத்திய சர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (12.10.2022) மாலை 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக “குடும்பங்களின் இன்றைய நிலை” தொடர்பான வீதி நாடகம் செம்முகம் ஆற்றுகை குழுவினால் வழங்கப்பட்டதுடன், “முதியோர், சிறுவர்களிடையே ஆளிடைத்தொடர்பைக் கட்டியெழுப்புதல்” தொடர்பாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி முதல்வர் திரு.லலீசன் அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன், சிறுவர் கழகமும் முதியோர் சங்கமும் இணைந்து நடாத்தும் ஆற்றுகை நாடகம், சிறுவர் பள்ளியின் குழு நடனம், தனிநடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்துடன் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதியோர்களையும் சிறுவர்களையும் இணைத்து இந்நிகழ்வை நடாத்தியமை சிறப்பாக இருந்ததாகவும் போதை பொருள் பாவனையிலிருந்து இச்சமூகத்தைத் மீட்க பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சிறுவயதிலிருந்து ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்றும் அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அலகின் ஏற்பாட்டில், Distance Learning Centre Ltd நிறுவனத்தினால் இணையவழி நிகழ்நிலை  ஊடாக நடாத்தப்பட்ட Mobile Apps Development பயிற்சியில் பங்குபற்றிய மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (13.10.2022 ) காலை  8.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மாவட்ட செயலக  திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் , தலைமை நிர்வாக அதிகாரி (DLC ) திரு.ஜி.  அருளானந்தம், கற்றல் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் (DLC ) திரு. கீர்த்தி விஜேசேகர, IT முகாமையாளர் திரு.டி. அருண புத்திக   மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பால்நிலைக்கு எதிரான வன்முறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (12.10.2022) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரோக்கியமான பால்நிலை, வன்முறையற்ற வேலைத்தளங்களை உருவாக்குதல் மற்றும் பால்நிலை தொடர்பான விழிப்புணர்வை அனைத்து ஊழியர்கள் மட்டத்திலும் ஏற்படுத்தல் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.ஆரோக்கியமான வேலைச்சூழலும் உளநல மேம்பாடும் தொடர்பாக உளவளத்துறை உத்தியோகத்தர் என்.உதயகுமார் கருத்துரை வழங்கினார்.
அத்துடன் வேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையற்ற ஆராக்கியமான வேலைச்சூழலை உருவாக்குதல் தொடர்பாகவும், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.தயாபரியினால் விளக்கமளிக்கப்பட்டது.