யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் "சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (24.09.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு வருட காலத்தினை உள்ளடக்கியதாக இச் சிங்கள டிப்ளோமா கற்கைநெறி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது " யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களமொழியை கற்பதில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆர்வம்காட்டுகின்றார்கள். பல அரச திணைக்களங்களில் சிங்கள மொழிபெயர்ப்பாளர்களின் தேவை காணப்படுகிறது. இச் சிங்களமொழி டிப்ளோமா கற்கை நெறியின் மூலம் இத் தேவைகள் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படலாம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (23.09.2022) பி.ப 2 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பிரதேச செயலகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளின்படி சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகள் இனங்காணப்பட்டு, சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் பாடசாலையில் இடைவிலகல் ஏற்படுவதற்கு போக்குவரத்து, வறுமை காரணங்களாக அமைவதுடன், கட்டாயக் கல்விக் குழுக்களை உருவாக்குதல், கிராமிய மட்ட சிறுவர் குழுக்களை வலுப்படுத்தல், சிறுவர் அபிவிருத்தி குழுக்களின் ஊடாக கண்காணிப்புக்களை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது.அத்தோடு, தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும், முடிவடையும் நேரங்களில் பொலிஸார் நடமாடும் சேவையில் ஈடுபட்டு கண்காணித்தல் வேண்டுமென குறிப்பிடப்பட்டது.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் உத்தியோகத்தர்களுக்கான மொழித் தடைதாண்டலுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் (23.09.2022) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட 150 மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்களக் கற்கைநெறியை பூர்த்தி செய்த கரவெட்டி மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களிற்கு இச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது "இலங்கையில் பிரதான மொழிகளாக தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் காணப்படுகின்றன. அநேகமான அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் சிங்களமொழியை கற்க ஆர்வமாகவுள்ளார்கள். ஆகவே இதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு மொழியை நாம் கற்கும் போது எமது ஆளுமை அதிகரிக்கிறது. அரச உத்தியோகத்தர்கள் எங்கு சென்றும் பணியாற்றுவதற்கு மொழி பிரதானமானது ஆகும். நீங்கள் மென்மேலும் தொழிற் தேர்ச்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் மூலம் இந் நிகழ்ச்சித்திட்டம் செவ்வேனே மேற்கொள்ளப்படுகிறது" எனவும் தெரிவித்தார்.

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பின் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடைபாதைப் பேரணி ஒன்றினை (23.09.2022) மேற்கொண்டுள்ளார்கள்.இப் பேரணியானது மு.ப 9.30 மணிக்கு நல்லூர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து மு.ப 11.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்திற்கு வந்தடைந்தது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வந்த பேரணியினருக்கு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கும் போது " சைகை மொழி பேசுவோரை கௌரவித்து அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். அத்துடன் தேசிய, மாவட்ட மட்டங்களில் இன்று சைகை மொழிக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக இம் மொழி பல்வேறு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்கள். அத்தோடு சைகை மொழியை சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ளும் பிரகடனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (21.09.2022) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக மூன்றாவது, நான்காவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாவிடில் இறப்புக்கள் அதிகம் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அத்தோடு பொதுமக்களுக்கு பைஸர் தடுப்பூசிகளை ஏற்றுதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்குமாறும் பிரதேச செயலாளர்களிற்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன், சமுதாய வைத்திய நிபுணர் Dr. சிவகணேஷ் மற்றும் பிரதேச செயலாளர்கள், சுகதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்