யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உணவுக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (21.09.2022) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், அனைத்து பிரஜைகளுக்கும் நாட்டில் நிலவும் எந்தவொரு நிலமையின் கீழும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான போதுமான உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை உருவாக்குதல் எனும் நோக்கத்துடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறை, உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பிரதேச ஒருங்கிணைந்த பொறிமுறை மற்றும் கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையம் ஆகிய பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடல் 20.09.2022 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியாக தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடல் தேர்தல் ஆணைக்குழுவால் வழிநடாத்தப்பட்டு, தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) ஆகியன இணைந்து நடாத்துகின்றது.

சிறுவர் வியாபாரம் மற்றும் யாசகத்திற்கு பயன்படுத்தலை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (16.09.2022) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொது இடங்களில் நிகழும் சமூகச்சீர்கேடுகளை தடுத்தல் மற்றும் கண்காணித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மையங்களை உருவாக்குதல், மாவட்ட மற்றும் சிறுவர் உத்தியோகத்தர்கள் ஊடாக மாணவர்களின் ஒழுக்கநெறிகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உணவுக் கையிருப்புப் பாவனை மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான இணைய வழி கலந்துரையாடல் (16.09.2022) ஜனாதிபதி செயலகத்தினால் நடாத்தப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இணையவழி மூலம் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட விலை நிர்ணய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (16.09.2022) பி.ப 1.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்டட நிர்மாணப் பொருட்கள், போக்குவரத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் ஏனைய பொருட்கள், சேவைகளின் விலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் உதவி ஆணையாளர், பொறியியலாளர், திணைக்கள தலைவர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், துறைசார் திணைக்கள பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்