மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (27.12.2022) 1.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக 3294 பேர் பதிவாகியுள்ளதுடன் 09 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.தற்போது பருவப்பெயர்ச்சி மழை காலம் என்பதால் டெங்கு நோய் பரவல் அதிகமாகவுள்ளது, இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3,4,5 ஆம் திகதிகளை விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக அறிவித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பாலசுந்தரம் பாலச்சந்திரன் அவர்களின் 36வருட அரச சேவையின் பணிஓய்வு பிரிவுபசார வைபவம் நேற்றையதினம் (26.12.2022) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்கள பிரதிப்பணிப்பாளர்கள், புள்ளிவிபரவியலாளர்கள், புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், மற்றும் யாழ் மாவட்ட புள்ளிவிபர பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் JSAC நிறுவனத்தினால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு வாரத்தையொட்டி பால்நிலைசார் வன்முறையால் பாதிக்கப்பட்டு வறுமைக்கு உட்பட்ட பெண்களுக்கு வழங்குவதற்கான உலருணவுப்பொதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் 24.12.2022 காலை 9.30 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், JSAC நிறுவன பிரதிநிதி மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

யாழ்.மாவட்டச் செயலக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சி.என். சூரியராஜா தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு (26.12.2022) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அத்தோடு , சர்வமத தலைவர்கள் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி கணக்காளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இத் தேசிய பாதுகாப்பு தினத்தில் 2004.12.26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலையால் மரணமடைந்த உறவுகளுக்காக ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது

2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்குரிய யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 23.12.2022 காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதுடன் போதைப்பொருள் பாவனை விழிப்புணர்வு, கட்டாய கல்வி குழுக்களை நியமித்து மீள்உருவாக்கல், தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பாா்வை செய்தல், பிறப்பு பதிவேற்ற பிள்ளைகளுக்கான சிறப்பு பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளல்,முன்பிள்ளை பருவ அபிவிருத்தி, அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன