தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் இணைந்து சிங்கள டிப்ளோமா கற்கைநெறியை கற்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களின் தலைமையில் 19.01.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் ஆர் ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டதோடு,கற்கை மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் திருமதி ஜே.பாலரஞ்சனி மற்றும் நில்மா லிசாந்தினி ரஞ்சனி, வட மாகாண இணைப்பாளர் பாலகிருஸ்ணா சிவ அஸ்வின், மாவட்டச் செயலக இணைப்பாளர் ந. உமாநாத், வளவாளர்கள் மற்றும் பயிலுநர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் 13.01.2022 அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவத்தினர் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளைப் பிரகடனத்திற்கமைவாக நச்சுத் தன்மையற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீட்டுத் தோட்டத்தில் நச்சுத் தன்மையற்ற சேதனப்பசளையை பயன்படுத்துவதை ஊக்கிவித்து, பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து இப் பசுமை வீட்டுத் தோட்டத்தின் மூலம் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ILO நிறுவனத்தின் நிதி பங்களிப்புடனும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் பயிற்சிப் பட்டறை நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.01.2022 காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "வட மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குகின்ற இறுதிகட்ட அறிக்கை தயாரிக்கும் போது அவர்களுக்கான எதிர்கால வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அத்துடன் பாரம்பரிய கடப்பாடுகளை கடைப்பிடிக்கின்ற அதேவேளை நவீன மாற்றங்களுடனான மொழி, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
மேலும், தரப்பட்ட சந்தர்ப்பத்தையும், முயற்சியையும் பயன்படுத்தி தொழில் வழங்குநர்களை உருவாக்கும் திட்டங்களை வட மாகாணத்துக்கு முன்னோடி திட்டமாக தயாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் “ நீதிக்கான அணுகுவழி ” நடமாடும் சேவை.
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் "உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்" எனும் தொனிப்பொருளிலான இரத்ததான நிகழ்வானது நலன்புரி சங்க தலைவரும் கணக்காளருமான ஏ.நிர்மல் அவர்களின் தலைமையில் யாழ். போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் பங்குபற்றுதலுடம் 2022.01.10 அன்று காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் , வைத்தியகலாநிதி பவித்ரா, பொது சுகாதார பரிசோதகர் த.ரவினதாஸ் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.மேலும், இரத்ததான நிகழ்வில் முப்பத்துநான்கு உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.





